search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா பொது செயலாளர்"

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகர் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர், கனடா பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Amritsartrainaccident #UNchiefGuterrescondole
    நியூயார்க்:

    பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

    இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின்  தண்டவாளத்தின் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.

    அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 61-ஆக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர், கனடா பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த மாதத்தின் துவக்கத்தின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலை காண்பதற்கான கவுரவம் எனக்கு அளிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் என்னை அன்பாகவும், கனிவாகவும் வரவேற்றனர்.

    இந்த கோர ரெயில் விபத்தால் வேதனைக்குள்ளாகி இருக்கும் பஞ்சாப் மக்களுடன் இப்போது எனது நினைவுகளும் இணைந்துள்ளது. இவ்விபத்தில் தங்களுக்கு பிரியமானவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் டுருடேயு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்த விபத்தால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கும் இந்தியர்களுடன் கனடா மக்களின் சோகமும் இணைந்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிராத்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #Amritsartrainaccident #UNchiefGuterrescondole #CanadianPMTrudeaucondole  
    ×